திருச்சி: சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புயல் காரணமாக தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கக்கடலில் நிலவி வரும் ஃபெஞ்சல் புயல்  இன்று இரவு கரையை கடக்கும் என்றும் இறுதி நேரத்தில் கரையை கடக்கும் இடம் மாறுபடும் என தெரிவித்துள்ள டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இதனால்,  அதிகனமழை பெய்வதோடு பலத்த காற்று வீசும் என்பதால் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரித்துள்ளார்.


வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு 140 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை  மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மழை மற்றும் புயல் நிலவரம் குறித்து டெல்டா வெதர்மன்ஹேமச்சந்தர் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதன்படி, பெஞ்சல் புயல்  தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம் -மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிககனமழை முதல் அதிதகனமழையும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தரைக்காற்றின் வேகமும், மழைப்பொழிவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் இன்று காலை 10 மணி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் படிப்படியாக மழை துவங்கும் என்றும்  எச்சரித்துள்ளார்.

இதனுடைய ஃபெங்கல் புயல் காரணமாக பல்வேறு இடங்களிலும் கடல் சீற்றம் கடுமையாக காணப்படுகிறது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் திருவான்மியூர் நீலாங்கரை கடற் பகுதிகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும்புவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.