சென்னை:
கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்த தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆளும் அ.தி.மு.க. மூன்று தொகுதிகளிலும் முன்னணியில் இருக்கிறது. இது எதிசர்பார்த்த ஒன்றுதான்.
அதே நேரம் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க.வைவிட குறைவான வாக்குகளையே தே.மு.தி.க. பெற்று வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டன. அதிதல் கூட்டணிக்காக மிகவும் முயன்றது பாஜகதான். ஆனால் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தே.மு.தி.க. அதனுடைய வாக்கு சதவீதமும் வெகுவாக குறைந்து படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இன்று மூன்று தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை வந்த நிலவரப்படி தே.மு.தி.க. மேலும் தனது வாக்கு வங்கியை இழந்து நிற்பது புரிகிறது. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சி என சொல்லப்படும் பா.ஜ.க.வைவிட தே.மு.தி.க. குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் பாஜக 1,491 வாக்குகளும், தேமுதிக 661 வாக்குகளையும் பெற்றுள்ளது. அதேபோல், திருப்பரங்குன்றத்தில் பாஜக 3,385 , தேமுதிக 2,462 , அரவக்குறிச்சியில் பாஜக 953, தேமுதிக380 வாக்குகளையும் பெற்றுள்ளது.
ஆக, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக சொல்லப்பட்ட தே.மு.தி.க. தனது செல்வாக்கை முற்றிலும் இழந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.