வடோதரா
புல்வாமா தாக்குதலால் உண்டாகி இருக்கும் ஒற்றுமையை பாஜகவின் வாக்குகளாக மாற்ற வேண்டும் என குஜராத் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பரத் பாண்டியா கூறி உள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருங்கிணந்துள்ளன. பாஜக அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் தரத் தயாராக உள்ளதாக அனைத்துக் கட்சி தலைவர்களும் கூறி உள்ளனர்.
குஜராத் மாநிலம் வடோதரா நகரில் வாக்குச்சாவடி தொண்டர்களின் கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. அதில் குஜராத் மாநில பாஜக தலைவரும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான பரத் பாண்டியா கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “புல்வாமா தாக்குதல் அனைத்து மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளது. வேற்றுமைகளை களைந்து விட்டு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்துள்ளதை நீங்கள் காணலாம்.
மக்கள் அனைவரும் தேசிய அளவில் ஒன்றிணைந்து இந்த தாக்குதலுக்கு எதிராக பேரணிகளை நடத்தி வருகின்றனர். மும்பையில் முன்பு திவிரவாத தாக்குதல்கள் நடந்த போது நிகழ்ந்தவைகளை நீங்கள் தற்போது நினைவு கொள்ள வேண்டும். அப்போது இருந்த சூழ்நிலை என்ன? அந்த தாக்குதல் குறித்து பாராளுமன்றத்தில் ஏதும் பேசப்பட்டதா? அப்போது உள்ளூர் மக்கள் அளவில் மட்டுமே தாக்குதல் குறித்து பேசப்பட்டது
.ஆனால் இப்போதைய சூழ்நிலை வேறு விதமாக உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் ஒன்றாக அந்த தாக்குதலையும் அதை நடத்திய பாகிஸ்தானையும் எதிர்த்து வருகின்றனர். இது தற்போது தேசிய அளவில் பேசப்படுகிறது. மக்கள் தீவிரவாதிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளை இரவும் பகலும் கவனித்து வருகின்றனர்.
இவ்வாறு தற்போது வீசும் தேசிய அலையை எப்படி வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதை நீங்கள் யோசனை செய்து முடிவு செய்ய வேண்டும். இந்த அளவு ஒற்றுமையான தருணம் இதற்கு முன்பு அமைந்தது இல்லை. அதே நேரத்தில் நீங்கள் கவனமாக பேச வேண்டும். உங்கள் பேச்சுக்களால் கட்சி மீது எந்த ஒரு தவறான எண்ணமும் உருவாகாமல் கவனமாக பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.