வுரங்காபாத்

மோடி கோட் என்னும் பெயரில் புகழ்பெற்ற வெயிஸ்ட் கோட் விற்பனை தற்போது மிகவும் குறைந்துள்ளது.

 

பிரதமர் மோடி தனது சட்டைக்கு மேல் ஒரு வெயிஸ்ட் கோட் அணிவது வழக்கம். கடந்த 2014 ஆம் வருட பொதுத் தேர்தல் சமயத்தில் மோடி இதை அணிந்து பிரசாரம் செய்ததால் இது மிகவும் புகழ் அடைந்தது.   இதற்கு மோடி கோட் என பெயரிட்ட ஆயத்த ஆடை அமைப்பாளர்கள் இதை பெருமளவில் தயாரித்தனர். மக்கள் மத்தியில் இந்த உடை மேலும் புகழ் பெறத் தொடங்கியது.

கடந்த பொதுத் தேர்தலின் போது இந்த உடையின் விற்பனை அதிகரித்தது. மோடி தேர்தலில் வென்று பிரதமர் ஆனதும் இந்த உடைக்கு மேலும் ஆதரவு அதிகரித்தது. பலர் இந்த உடைகளை வாங்க ஆரம்பித்தனர். வட இந்தியாவில் மோடி கோட் கிடைக்காமல் பலர் காத்திருந்தனர். இந்த மோடி கோட்டுகள் பெருமளவில் அவுரங்காபாத் நகரில் தயாரிக்கப்பட்டன.

ஒரு முறை இந்த மோடி கோட் தைத்துக் கொள்ள ஒருவர் துணியுடன் தையல் கடைக்கு சென்றுள்ளார். அந்த தையல் கலைஞருக்கு அப்போது திருமண ஆர்டர்கள் இருந்ததால் அவரால் உடனடியாக தைத்து தர முடியவில்லை. அதனால் அவர் சுமார் 15 நாட்கள் காத்திருந்து கோட் தைத்து வாங்கிக் கொண்டுள்ளார். அது மட்டுமின்றி இந்த கோட்டுக்கள் ஆயத்த ஆடை கடைகளில் வாரம் தோறும் சுமார் 35 கோட்டுக்க்ள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த கோட்டுக்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் நினைத்தனர். ஆனால்  மோடி கோட் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.   தற்போது மோடி கோட் வாரத்துக்கு ஒன்று மட்டுமே விற்பனை ஆவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி  இருப்பில் இருக்கும் மோடி கோட்களை வாங்க யாரும் முன் வராததால் இந்த உடையின் கொள்முதல் அடியோடு நிறுத்தப் பட்டுள்ளன.

இது குறித்து ஆயத்த ஆடை உற்பத்தியாளர் குருவிந்தர் சிங் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாகத்துக்கு பிறகு மற்ற ஆயத்த ஆடைகளின் விற்பனை குறைந்ததைப் போல் மோடி கோட் விற்பனையும் குறைந்துள்ளதாக கூறினார். அத்துடன் அவர் இப்போது வெயில் ஆரம்பித்து விட்டதால் அனைவரும் இத்தகைய உடைகளை விட்டு விட்டு சாதாரண பருத்தி ஆடைகளை விரும்புவதாக தெரிவித்தார்.

இது குறித்து சில்லறை வர்த்தகர் ஒருவர், “தற்போது பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால் கடந்த 2014 தேர்தல் மற்றும் அதற்கு பின்பு இதே போல் வெயில் காலத்தில் மோடி கோட் ஏராளமாக விற்பனை ஆகியது. தற்போது தேர்தல் நடப்பதால் விற்பனை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் மத்தியில் மோடி கோட் உடைக்கு மவுசு குறைந்துள்ளது”என தெரிவித்துள்ளார்.