ஆக்ரா:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்  அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்தநவம்பர் 8ம் தேதி திடீரென இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போது முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். என அலைந்து வருகிறார்கள். வங்கி, , ஏடிஎம் வரிசைகளில் காத்துக் கிடந்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இது நல்ல திட்டம் என்று பாராட்டியவர்கள்கூட, இன்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். “அரசின் திட்டம் நல்ல திட்டம்” என்று புகழும் சிலரும்கூட, “சரியான முன்னேற்பாடுகளோடு இத்திட்டத்தை செயற்படுத்தியிருக்க வேண்டும். நிர்வாக ரீதியாக மத்திய அரசு தோற்றுவிட்டது” என்று கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
pr
இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார். ஆக்ராவில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேசியதாவது:
“இந்த நாட்டு மக்களை கருப்பு மற்றும் கள்ளப் பணத்தின் பிடியிலிருந்தும், ஊழலின் பிடியிலிருந்தும், விடுவிக்க பாடுபடுகிறேன். இதற்காக மக்கள் தந்து வரும் ஒத்துழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். எனது நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு தந்து வருகிறார்கள். இதற்காக வணங்குகிறேன். கடும் சிரமத்திற்கு இடையேயும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தலித்துகள், ஆதிவாசிகள், விவசாயிகள், தாய்மார்கள், எல்லோருமே சிரமப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கஷ்டம் வீணாகாது என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தை நான் அவ்வப்போது மறு ஆய்வு செய்வேன். அதில் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என்று அன்றே நான் கூறியிருக்கிறேன். அதை நான் மறக்கவில்லை. நாட்டின் நேர்மையான மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இந்தத் திட்டத்திற்காக வங்கி ஊழியர்கள் சீரிய முறையிலும், கடுமையாகவும் பபணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஊழல் செய்தவர்கள் இப்போது சரியான பாதைக்குத் திரும்பி வருகின்றனர். மக்கள் சங்கடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்தத் திட்டம் வந்தது முதல் இதுவரை வங்கிகளில் 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. ஏழைகளிடமும், நடுத்தர வர்க்கத்தினரிடமும் கருப்புப் பணம் கிடையாது. ஆனால் அவர்கள் வீடு கட்ட வேண்டுமானால் வீடு கட்டித் தருவோரிடம் அவர்கள் பெரும் பணத்தைத் தர வேண்டியுள்ளது. எனவே வெள்ளைப் பணத்தை அவர்கள் கருப்பாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். .
ரூபாய் நோட்டு ஒழிப்பால் சிலருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர்கள் எனக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். அவர்கள்தான் சிட் பண்ட் மோசடிகளைச் செய்தவர்கள். அவர்கள்தான் இன்று எனக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். இவர்களைக் காப்பது எனது வேலை அல்ல. ஆனால் ஏழைகளைக் காப்பதுதான் எனது வேலை.
இன்று சில கருப்புப் பண முதலைகள் தங்களிடம் உள்ள பணத்தை ஏழைகளிடம் கொடுத்து உங்களது ஜன் தன் கணக்கில் 2.5 லட்சத்தைப் போட்டுக்கொள்ளுங்கள். அதில் 2 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள். மீதமுள்ள 50,000ஐ நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர். மக்களே அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களுக்குத்தான் பிரச்சினை வரும்!” – இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். .