அத்தி வரதர் தரிசனம் : அரசு என்ன செய்கிறது? – மக்கள் கேள்வி

Must read

காஞ்சிபுரம்

காஞ்சியில் அத்தி வரதர் தரிசனத்தை ஒட்டி அரசு சரியான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அத்தி வரதர் தரிசன விழா தற்போது நடந்து வருகிறது. அத்தி வரதரை தினமும் லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய இந்த தரிசனம் இன்னும் 30 நாட்களுக்கு தொடரும் என்பதால் மேலும் பல லட்சக்கணக்கானோர் காஞ்சி நகருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த காஞ்சி நகரில் வார இறுதிகளில் இதைப்போல் இரு மடங்கு அல்லது மும்மடங்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்தும் விடுமுறை நாட்களில் பலர் வருகின்றனர். ஆனால் பக்தர்களுக்கு இங்கு குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் சரிவர இல்லை. கோவிலை சுற்றி உள்ள 4 மாடவீதிகளில் ஆறு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.

அவையும் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இந்த கழிப்பறை வசதியின்மை வயதானவர்களை மிகவும் துயருக்கு உள்ளாக்குகிறது. அடுத்ததாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மிக மோசமாக உள்ளது. தனியார் வாகனங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து மக்களுக்கு சரியாக வழி காட்ட யாரும்கிடையாது. காலை மாலை எந்நேரமும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

குறிப்பாக வார இறுதிகளில் பழைய வரதராஜ சாமி கோவிலை சுற்றி உள்ள குறுகலான தெருக்களில் கூட்டம் அலை மோதுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து எடுக்கப்படும் அத்தி வரதரை காண கூட்டம் அதிகம் வரும் என தெரிந்தும் சரியான நடவடிக்கைகள் இல்லை என மக்கள் அரசை குறை கூறுகின்றனர். அத்தி வரதரை தரிசிக்க சுமார் மூன்று மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. . வார இறுதி நாட்களில் அது எட்டு மணி நேரம் ஆகிறது.

பக்தர்களுக்காக வைக்கப்படும் குடிநீர் வெகு விரைவில் தீர்ந்து விடுகிறது. ஆனால் மீண்டும் நீர் நிரப்பப்படுவதில்லை. அத்துடன் கழிப்பறைகள் திங்கள் கிழமை அன்று மூடப்பட்டு விடுகிறது. சென்னையில் இருந்து தரிசனத்துக்கு வந்த 70 வயது முதியவர் பட்டு என்னும் பெண்மணி தம்மை போன்ற வயதானவர்களுக்கு இது மிகவும் கஷ்டத்தை அளிப்பதாக குறை கூறி உள்ளார். அது மட்டுமின்றி இந்த நாட்களில் கழிப்பறை அருகில் பலரும் சிறுநீர் கழிப்பதால் அந்த பக்கமே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக கூறி உள்ளார்.

வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் தற்போது மிகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கோவிலை சுற்றி வசிக்கும் மக்களுக்கு வாகனங்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலை வேளைகளில் பால், செய்தித் தாள் போன்றவைகள் கிடைப்பதில்லை.

மாவட்ட ஆட்சியர் இந்த அரசு பக்தர்களுக்காக ரூ. 29 கோடி செலவில் வசதிகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் பக்தர்கள் எந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் கூறுவாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

More articles

Latest article