சென்னை

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் நிலையில் புறநகர் ரயில் சேவையும் முடங்கி உள்ளதால் சென்னை மக்கள் துயருற்றுள்ளனர்.

மாநிலம் எங்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர்.  அவர்கள் 14 ஆம் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அரசு வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் பலர் வேலைக்கு வரவில்லை.

இன்று பெரும்பாலான பேருந்துகள் ஓடாததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.  குறிப்பாக வேலைக்குச் செல்லும் மக்களால் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இவர்களுக்கு மேலும் துயரத்தை அதிகரிக்கும் வகையில் சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயில் பாதையில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சார ரயில் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணிக்குச் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது.  இதனால் கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மூன்று தடங்களில் இருமார்க்கமாக இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  ரயில்வே ஊழியர்கள் புதிய மின்கம்பியைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும் பயணிகள் வசதிக்காகத் தாம்பரம் ரயில் நிலையத்தின் 5 மற்றும் ஆறாம் தடங்களில் இருந்து குறைவான அளவில் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன.  பேருந்துகள் சரியாக ஓடாத நிலையில் மின்சார ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது.   எனவே பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.