ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் நெல்லூர் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி. (வயது 55). 1984-ம் ஆண்டு 21 வயதில் பியூன் வேலைக்கு சேர்ந்தார். ரூ.650 சம்பளத்தில் பணிக்கு சேர்ந்த இவர் தற்போது மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். 34 ஆண்டுகளாக பல பதவி உயர்வுகளையும் மறுத்து இதே அலுவலகத்தில் தான் பணியாற்றி வருகிறார்.

நெல்லூர் எம்.வி. அக்ரஹாரத்தில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் நரசிம்ம ரெட்டி சமீபத்தில் காலிமனை ஒன்றை வாங்கினார். இது அவருடைய 18-வது நிலச்சொத்து ஆகும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆந்திர லஞ்ச ஒழிப்பு துறைக்கு இவர் மீது பல புகார்கள் வந்தன. இவரது சொத்துகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். நேற்று முன்தினம் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

சோதனையில் அவர் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத ரூ.7.70 லட்சம் மதிப்பு 2 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்கள், எல்.ஐ.சி.யில் ரூ.1 கோடி டெபாசிட், ரூ.20 லட்சம் வங்கி சேமிப்பு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள 18 வீட்டு மனைகள், 50 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் சொகுசு பங்களா தொடர்பான ஆவணங்களும் சிக்கின. இதையடுத்து பியூன் நரசிம்மரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.