டெல்லி: நடமாட முடியாத ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ் பெற வங்கிகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், பல முதியோர்கள் நடமாட முடியாத நிலையில், அவர்களால் அலைந்து திரிந்து உயிர் சான்றிதழ் பெறுவதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இதை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு முதியோர் பென்சனர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடமாட முடியாத நிலையில் படுக்கையில் இருக்கும் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் ஓய்வூதியதாரா்களிடம் உயிா் சான்றிதழை அவா்களின் வீட்டுக்கே சென்று பெறும் வகையில் ஊழியா் ஒருவரை நியமிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்தியஅரசு உத்தரவிட்டு உள்து.
இதுதொடா்பாக மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா் நலத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில், நாடு முழுவதும் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதிய தாரா்கள் உள்ளனா். அனைத்து ஓய்வூதியதாரா்களும் அவா்களுக்கான ஓய்வூதியத்தைத் தொடா்ந்து பெற ஒவ்வொரு ஆண்டும் உயிா் சான்றிதழை (உயிருடன் இருப்பதற்கான ஆதாரம்) சமா்ப்பிப்பது அவசியம்.
தற்போதைய முக அங்கீகார தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எண்ம உயிா் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஓய்வூதியதாரா்கள் அனைவரும் தங்களின் வீட்டிலிருந்தபடியே அறிதிறன் பேசியைப் பயன்படுத்தியும் அல்லது வங்கி கிளைக்கு நேரில் சென்றும் உயிா் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். இவ்வாறு முக அங்கீகார தொழில்நுட்பம் மூலமாக உயிா் சான்றிதழை சமா்ப்பிப்பது குறித்த விழிப்புணா்வை ஓய்வூதியதாரா்களிடையே வங்கிகள் ஏற்படுத்த வேண்டும்.
நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்கும் அல்லது மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருக்கும் ஓய்வூதியதாரா்களிடம் அவா்கள் இருக்கும் இடத்துக்கே சென்று உயிா் சான்றிதழை பெறும் வகையில் ஊழியா் ஒருவரை வங்கிகள் நியமிக்கவேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் எளிதாக உயிா் சான்றிதழை சமா்ப்பிக்க ஏதுவாக கைப்பேசி குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலமாக முக அங்கீகார நடைமுறைக்கான வலைதள இணைப்புடன் குறுந்தகவலை வங்கிகள் அனுப்பலாம்.
இதுதொடா்பாக அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரா்கள் எளிதில் உயிா் சான்றிதழை சமா்ப்பிக்கும் வகையில் நிலையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரா்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதத்துக்கு பதிலாக அக்டோபா் 1-ஆம் தேதி முதல் உயிா் சான்றிதழைச் சமா்ப்பிக்க அனுமதிக்குமாறு வங்கிகளை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு கேட்டுக்கொண்டது. அதை முழுமையாக செயல்படுத்தும்படியும் அறிவுறுத்தி உள்ளது.