சென்னை:  ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும்  என தமிழ்நாடு  மாநில தகவல் ஆணையம்  தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும்  என்றும் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணைய தலைவராக ஒய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் இருந்து வருகிறார். அவருடன்  ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, பி.தாமரை கண்ணன், வழக்கறிஞர்  ஆர்.பிரியகுமார்,  டாக்டர்.கே.திருமலைமுத்து, ஐ.சி.எல்.எஸ் , பேராசிரியர்.டாக்டர்.எம்.செல்வராஜ், எம்.எஸ்சி.,  ஆகியோரும் ஆணையர்களாக உள்ளனர். இந்த ஆணையம் ஆர்டிஐ மூலம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் வாங்கி பயனர்களுக்கு அளித்து வருகிறது.

இந்த நிலையில்,  ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக,  அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆா்.ராஜா என்பவர்,  தனது  பணி ஓய்வு அளிக்கப்பட்டதற்கான கோப்புகளின் நகல்களைக் கேட்டு கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு  கடந்த 2003-ஆம்  விண்ணப்பித்தாா்.  அவரது விண்ணப்பம், 22 ஆண்டுகளை கடந்த நிலையில், இன்றுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர், முதலாவது மேல்முறையீட்டு விண்ணப்பத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்துக்கு மனுதாரா் ராஜா அனுப்பி வைத்தாா். இதற்குப் பதிலளித்த கருவூலத் துறை, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தகவல் வழங்க வழியில்லை என்று தெரிவித்தது.

இதன்பின், இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பினாா். இந்த வழக்கு மாநில தகவல் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது விசாரணைக்கு  காணொலி வாயிலாக ஆஜரான மனுதாரா் ராஜா, தான்  கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் உதவி கணக்கு அலுவலராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, வேளாண் துறையில் பணியாற்றினேன். பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், வேளாண் துறையில் தணிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், அந்தத் துறையிடம் இருந்து எனது தரப்பிலான ஆவணங்கள் தரப்படவில்லை.

இதற்குப் பதிலாக என்னிடம் இருந்து ரூ.20 மதிப்பிலான பத்திரத்தில் விவரங்கள் எழுதி வாங்கப்பட்டது. அதில், தணிக்கையில் அரசுக்கு இழப்பு ஏதும் இருப்பதாகக் கண்டறியப் பட்டால், அதை எனது பணிக் கொடையில் இருந்து பிடித்தம் செய்ய சம்மதம் தெரிவிப்பதாகவும், தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைக்கு வட்டி கோர மாட்டேன் எனவும் எழுதித்தர கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்பிறகே எனக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது.

இவ்வாறெல்லாம் கேட்பது பணி ஓய்வு விதிகளுக்கு முரணானது. இந்தப் பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தை நாடுவதற்கு உரிய கோப்புகளை கருவூலத் துறையிடம் கோரினேன். ஆனால், தகவல்கள் உரிய காலத்தில் அளிக்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். இதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையா்  பேராசிரியர் மா.செல்வராஜ்,  மனுதாரா் கோரிய தகவல்களை உரிய காலக்கெடுவுக்குள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வழங்கவில்லை. இதனால் மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரா் கோரிய தகவல்களை வழங்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்துடன் பொதுத் தகவல் அலுவலா் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  எனவே, தகவல்களை ஜூன் 27-ஆம் தேதிக்குள் தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசு ஊழியா்கள் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து இருந்தாலும், ஓய்வு பெற்ற பிறகு அவா்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை அளிப்பது கருவூலம் மற்றும் கணக்குத்துறைதான்.

ஓய்வூதிய நிா்ணயம், ஓய்வூதியம் வழங்கப்படாதது தொடா்பான விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரக்கூடிய ஓய்வூதியதாரா்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதைக் காண முடிகிறது.

எனவே, ஓய்வூதியதாரா்கள் கோரும் தகவல்கள் அவா்களது வாழ்வு மற்றும் சுதந்திரம் தொடா்புடையதாகும். இதைக் கருத்தில்கொண்டு ஓய்வூதியம் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அதிலிருந்து 48 மணி நேரத்துக்குள் பொதுத் தகவல் அலுவலா்களால் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேல்முறையீடுகளுக்கும் அதே கால அளவில் தீா்வு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு கூறி உள்ளார்.