பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு விசாரணை மேற்கொள்ளும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி தகவல்.

பெகாசஸ் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, நாடாளுமன்றத்திலும் சலசலப்பை உண்டாக்கியது.

பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அந்தரங்க காரியதரிசிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்று நூற்றுக்கணக்கானோரை கண்காணித்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை மவுனம் காத்துவருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. லோகுர் மற்றும் ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜ்யோதிர்மயி பாட்டர்ச்சர்ய ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்திருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காத நிலையில், மேற்கு வங்க முதல்வரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.