டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவினரின் விசாரணைக்கு மத்தியஅரசு ஒத்துழைக்கவில்லை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தலைமை நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு,  இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள், நீதிபதிகள்,  எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக இந்து ராம் உள்பட  பத்திரிகையாளா்கள் மற்றும் பலர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணையின்போது, மத்தியஅரசு முழுமையான தகவல்களை தெரிவிக்க மறுத்து விட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் தொழில் நுட்ப நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழில்நுட்ப நிபுணர் குழுவானது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

இந்த குழுவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிபுணர்குழுவின்  மூன்று பாகங்களாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், இரண்டு பாகம் தொழில்நுட்பக் குழுவும், ஒரு பாகம் நீதிபதியும் சமர்பித்து உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும், இந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் ரகசியமாக வைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளதாகவும்,  இந்த குற்றச்சாட்டு குறித்த ஆய்வு செய்யப்பட்ட 29செல்போன்களில் 5செல்போன்களில் உளவு பார்த்ததற்கான செயலி இருந்ததாக தெரிவித்துள்ளதுடன், தங்களின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், இணைய பாதுகாப்பை மேம்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவும், உளவு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வழிமுறைகளை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளனர்.” நிபுணர் குழுவின் அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பிறகு கருத்து தெரிவிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.