சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள், தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர்.  இனி அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்கள் மேல் அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை நான் அவதானிக்கிறேன். அந்த அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, வேறேதும் கிடையாது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பழ.நெடுமாறன், “அப்பாவிச் சிங்கள மக்களுக்கு இனவெறியை ஊட்டிவிட்டதோடு, அவர்களை இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டு அரசியல் நடத்துகிற ராஜபக்ச கும்பல் எத்தகையது என்பதை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. மனித உரிமை ஆணையத்தால் போர் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் மகனிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.