சென்னை: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா கமல்ஹாசன் முன்னிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவர் தேர்தலில் போட்டியிடுவார் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி தவிர்த்து, சசிகலா தலைமையில் ஒரு கூட்டணியும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை நடிகர் சரத்குமார், கமல்ஹாசனை சந்தித்து, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், எழுத்தாளருமான பழ.கருப்பையா, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கமல்ஹாசனை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், பழ.கருப்பையாவை, நேர்மையாளர்களின் கூடாரத்திற்கு வரவேற்கிறேன், நடைபெற உள்ள தேர்தலில் பழ.கருப்பையா போட்டியிடுவார் என்றார்.
மநீம வேட்பாளர் தேர்வுகுழு உறுப்பினர்களாக கமல்ஹாசன், பழ.கருப்பையா, பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் ஆகியோர் பணியாற்றுவார்கள் என கூறியதுடன், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மநீம-வுடன் இணைந்து தேர்தல் களம் காண இருப்பதாகவும், மார்ச் 1 முதல் என் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்குழு கலந்தாய்வில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.
மார்ச் 7-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த கமல், மார்ச் 3 முதல் தான் அடுத்தகட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் மக்கள் நீதி மய்யத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தான்தான் என்றவர், தமிழகத்தில் மாற்றம் நிகழப் போகிறது என்றும், மூன்றாவது அணி அமைய இருப்பதாகவும், வெற்றி பெறுவோம் எனவும் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பழக்கருப்பையா ஏற்கனவே திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.