சென்னை
லைக்கா புரொடக்ஷன் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் சப் டைட்டில் அமைத்ததற்கான ஊதியபாக்கி இன்னும் தரப்படவில்லை.
தென் இந்தியத் திரைப்படங்களுக்கு தற்போது பல உலக நாடுகளில் வரவேற்பு உள்ளது. அதிலும் பிரமாண்ட தயாரிப்புக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த படங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் அமைக்கப்பட்டு அந்த நாடுகளில் வெளியிடப்படுகிறது எனவே இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களில் இந்த மொழிபெயர்ப்பும் ஒன்று என்பதில் ஐயமில்லை. பல ஹாலிவுட் பிரபலங்களும் இந்த சப் டைட்டில் உதவியுடன் தென் இந்திய மொழிப் படங்களைக் கண்டு களித்து வருகின்றனர்.
இவ்வாறு சப் டைட்டில் மூலம் புகழ் பெறும் தமிழ்ப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் முதலிடம் வகிக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான 2.0 என்னும் திரைப்படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு மற்றும் இந்தி வடிவங்களும் ஆங்கில சப் டைட்டிலுடன் முன்னணி இடங்களில் உள்ளன. இந்த படங்கள் அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்களில் வெளியாகி உள்ளன.
இந்த சப் டைட்டிலை அமைக்கும் பணியை ரேகா என்னும் ஒரு பெண் செய்து வருகிறார். இவர் 2.0 படத்துக்கு அமைத்த சப் டைட்டில்கள் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன. ஆனால் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இது வரை அவருக்கு அளிக்க வேண்டிய ஊதியத்தை அளிக்காமல் உள்ளது. இது குறித்து அவர் பலமுறை நிறுவனத்தை அணுகு உள்ளார். ஆனால் அதனால் எவ்வித பயனும் இல்லாத நிலை உள்ளது.
இது குறித்து ரேகா, “நான் எனது பணிக்கான ஊதியத்தைக் கேட்டு வருகிறேன். அதைத் தராமல் இருப்பது சரி அல்ல. நான் இந்தப் படத்தின் தமிழ் வடிவத்துக்கு சப் டைட்டில் அமைத்தற்கான ஊதியத்தை மட்டுமே கேட்டு வருகிறேன். ஆனால் அதே சப் டைட்டில்கள் தெலுங்கு மற்றும் இந்தி வடிவங்களிலும் பயன்படுத்தப்பட்டு அமேசான் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திரைப்படம் ஈட்டிய பணத்தில் எனது ஊதியம் 0.001% கூட கிடையாது. ஆயினும் அதை இன்னும் நிறுவனம் அளிக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
ரேகாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் லைகா நிறுவனம் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளியிடவில்லை.