திருமலை: ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம் நடடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை முதல் நாள்தோறும் ஏராளமான சிறப்பு பூஜைகள், உற்சவங்கள், தரிசனங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறு வழக்கம்.  அதாவது, வருடம் முழுவதும்  கோவிலில் செய்யப்படும் பூஜைகள், வழிபாட்டு முறைகளில் புரோகிதர்கள், ஆலய பணியாளர்கள், நிர்வாகிகள், பக்தர்கள் என எவராவது தெரிந்தோ, தெரியாமலோ ஆகம விதிகளை மீறி செய்த செயல்களால் ஏற்பட்ட பாவங்களை நீக்கி, மீண்டும் தெய்வீக தன்மையை முழுமை பெற செய்வதற்காக இந்த பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி,  இந்தாண்டு பவித்ர உற்சவம் வரும் 15ம்தேதி தொடங்கி 17ம்தேதி வரை 3நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி 3 நாட்களும் கோயில் சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமஞ்சனமும், கோயிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தேவி, பூதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

15ம்தேதி பவித்ர மாலைகள் பிரதிஷ்டை, 16ம்தேதி பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 17ம்தேதி யாகம் பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறும். இதனையொட்டி 14ம்தேதி அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.

பவித்ர உற்சவத்தையொட்டி வரும் 14ம்தேதி சகஸ்ர தீப அலங்கர சேவையையும், 15ம்தேதி திருப்பாவாடை சேவை, 15ம்தேதி முதல் 17ம் தேதி வரை  ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதி தரிசன நேரம் : திருப்பதியில் தற்போது வரை தினசரி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 63,000 முதல் 75,000 வரை உள்ளது. சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் 12 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.  சராசரியாக ஒரு நாளைக்கு 30,000 முதல் 40,000 வரையிலான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர்.