சென்னை: நடைபாதை அமைக்கும் பணி  காரணமாக வட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நெரிசல் மிகுந்த வடசென்னையில், நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்றுமுதல்  சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது

சென்னை மாநகராட்சி நிர்வாகம் பாதசாரிகளின் வசதிக்காக M.C. சாலையினை சிமெட்ரி சாலை சந்திப்பிலிருந்து G.A. சாலை சந்திப்பு வரை சாலை முழுவதும் பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணி இன்று (07.02.2024) முதல் தொடங்கபட உள்ளது.

இதையொட்டி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உள்ளது.

அதன்படி,  இன்று சென்னை எம்.சி சாலை- சிமெட்ரி சாலை சந்திப்பு பகுதி வரை பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணிதொடங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டான்லி சுரங்கப்பாதையிலிருந்து M.C.சாலையினை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் திருவெற்றியூர் நெடுஞ்சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கும்மாளம்மன் கோவில் சாலை மற்றும் G.A. சாலையிலிருந்து M.C.சாலையினை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்கு கல்மண்டபம் சாலை மற்றும் மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.