சென்னை:  பட்டினம்பாக்கம் மெரினா வளைவு சாலையில் (லூப் சாலை) உள்ள மீன் கடைகளை நவீன மீன் சந்தைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக  நீதிமன்றத் தில்  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா வளைவு சாலை பகுதியில் அதிக அளவில் மீன் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே சாந்தோம் சாலை ஒருவழைப்பாதையாக இருப்பதுடன், தற்போது மெட்ரோ பணிகளும் நடைபெற்று வருவதால்,  வாகன ஓட்டிகள் பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையையே பயன்படுத்த வண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அந்த சாலை முழுவதும் கான்கிரீட்டில் நவீன சாலையாக கடந்த ஆட்சியில் மாற்றப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் குடியிருக்கும் மீனவர்கள் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து மீன் கடைகளை போட்டு விற்பனை செய்து வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இதுதொடர்பான மோதல்களும் நடைபெற்ற வருகின்றன.

அதன் காரணமாக, மெரினா வளைவு சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், அந்த பகுதியில் செயல்படும் மீன் கடைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன்,    இக்கடைகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், துர்நாற்றம் வீசுவதாகவும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.


இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்பகுதி மீன் விற்பனையாளர்களுக்கென மாநகராட்சி சார்பில் நொச்சிக்குப்பம் பகுதியில் ரூ.15 கோடியில் 366 கடைகள் கொண்ட மீன் சந்தை கட்டப்பட்டது.

இந்த நவீன மீன் சந்தையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் சந்தையை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக கடைக்காரர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த கடைகளுக்கு முழுமையாக மீனவர்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் நீடிக்கிறது.

இநத் நிலையில், வழக்கின் விசாரணையின்போது, பட்டினம்பாக்கம் மெரினா வளைவு சாலையில் உள்ள மீன் கடைகளை நவீன மீன் சந்தைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக  மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்,  மெரினா கடற்கரையோரம் இயங்கி வரும் மீன் கடைகள் தொடர்ந்து, புதிய சந்தை பகுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து கடைகளும் சந்தைக்கு மாற்றப்படும்.  அதைத்தொடர்ந்து, மெரினா வளைவு சாலை சாலையோர வியாபாரம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்றார்.