சென்னை:

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று புயலாக மாறவுள்ளது.

Torrential rain causing flood.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:செவ்வாய்க்கிழமை உருவாகும் என எதிா்பாா்க்கப்படும் புயலால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் இன்று முதல் வியாழக்கிழமை வரை பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய அதி பலத்த மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் அதி பலத்த மழையும், சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதி, தெற்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 80 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 3-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிக்கு டிசம்பா் 4-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.