பாட்னா:
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில்,  5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 34 முடிவுகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பீகார் அமைச்சரவை செயளார் சஞ்சய் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பாட்னா அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பணிக்காக 5540.07 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள், பீகார் மருத்துவ சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பீகார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 1925-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கையால், இந்த மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்குவதுடன், நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்றும் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த மருத்துவமனை 1754 படுக்கைகளுடன் இருந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மருத்துவ கல்லூரியில் எம்எம்பிஎஸ் சீட்டை 150-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக, 5,462 படுக்கைகளுடன் 36 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறையாக மாற்றப்பட உள்ளது என்று கூறிய குமார், தற்போது 3500 படுக்கைகளுடன் செர்பியாவின் பெல்கிரேட்டில் இருந்து வருகிறது.

பீகார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடுத்த ஏழு ஆண்டுகளில் மூன்று கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ள குமார், சம்பந்தப்பட்ட துறை, இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது கிரீன் பில்டிங்காக மாற்றப்பட உள்ளதுடன் லோக்நாயக் கங்கை பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கங்கை நதிக்கு அருகிலேயே கட்டப்பட உள்ளது. மேலும் இந்த மருத்துவமனை இரட்டை அடுக்கு கொண்ட மேம்பாலம் மற்றும் காந்தி மைதானத்தில் உள்ள கார்கில் சவுக் பகுதியுடன் இணைக்கப்பட்ட உள்ளது.