சென்னை: மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளி உயிரிழந்ததாக, நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில்தான நடைபெற்றுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
`ஒரு டாக்டருக்கு ஒன்னுனா துடிக்கிறீங்க.. இன்னைக்கு டாக்டரால என் தம்பி விக்னேஷ் செத்துட்டான்..”என இறந்தவரின் அண்ணன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
பொதுவாகவே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், அங்கு சிகிச்சைக்கு வரும் ஏழை மக்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவர்களிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் அதற்கு முறையான பதில் சொல்வது கிடையாது. மேலும் ஏனோதானாவென்ற சிகிச்சைகளே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மனம் உடையும் ஏழை மக்கள்வேறுவழியின்றி, மருத்துவமனை ஊழியர்களின் ஏச்சையும், பேச்சையும் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
இதுபோன்ற சம்பவகளின் எதிரொலிதான் கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம். புற்றுநோய் பாதிக்கப்பட்ட தன்னை பெற்ற தாய்க்கு முறையான மருத்துவம் பார்க்காமலும், கேட்க கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமலும் ரூடா நடந்துகொண்டதால்தான், நோயாளியின் மகன், மருத்துவமனையின் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருக்க அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மனநிலை ஆலோசனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நோயாளிகளிடம் அன்பாக பேசினாலே பல நோய்கள் காணாமல் போய்விடும். ஆனால், மருத்துவர்கள், அதை செய்வதற்கு பதிலாக ஏனோதானேவென்று சிகிச்சை அளிப்பதால்தான் பல் தேவையற்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பரபரப்புக்கு மத்தியில், கத்திக்குத்துசம்பவம் நடைபெற்ற கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், வயிற்று வலி நேற்று இரவு 7 மணியளவில் கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பண வசதி இல்லாததால் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சோதனையில், அவர், பித்தப்பை கல் பிரச்சனையால் அவதிப்படுவதாக கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 12 மணியளவில், அவசர சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்துவிட்டார் என அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் உறவினர்கள், ருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி, மருத்துவமனை வளாகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் விக்னேஷின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தற்போது மருத்துவமனை தரப்பில் இருந்து விக்னேஷின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “பித்தப்பை கல் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பெற்று, நோய் தீவிரத்துடன் விக்னேஷ் அழைத்து வரப்பட்டார். விக்னேஷ் அழைத்து வரப்பட்ட அன்று அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர். குடல் நோய் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இறந்த விக்னேஷ்க்கு முறையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.