கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று செவிலியர் ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி. கூலித்தொழிலாளியான இவருக்கு சவுராமா என்கிற மனைவியும், ஷர்மிளா பானு, ஆதிதா பானு என இரு மகள்களும், மன்சூர் அலிகான் என்கிற மகனும் உள்ளனர். இதில் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது. அன்வர் அலி, சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 19ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு டயாலிஸ் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அப்போது பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அன்வர் அலியிடம், டயாலசிஸ் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட 5 நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். நோயின் தன்மை குறித்து நோயாளியிடம் வெளிப்படையாக தெரிவித்ததால் அவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்வர் அலியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவமனை டீன் அசோகன், “கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நோய் குறித்து தெரிவிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் அவரின் நிலை குறித்து செவிலியர் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. மேலும் இங்கு வரும் நோயாளிகளிடம், கனிவாக பேசி சில புரோக்கர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்று நோயாளியிடம் தெரிவித்து இருக்கலாம். இதில் உண்மை தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.