நகர்ப்புறங்களில் தேய்ந்து கிராமப்புறங்களில் வளரும் பதஞ்சலி விற்பனை

Must read

டில்லி

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களின் விற்பனை நகர்ப்புறங்களில் மிகவும் குறைந்து கிராமப்புறங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.

பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் தொடங்கிய ஆயுர்வேத நிறுவனம் பதஞ்சலி நிறுவனம் ஆகும். பிரபல சமூக ஆர்வலர் அன்னா அசாரேவுடன் ஏற்பட்ட நட்பினால் பிரபலமான பாபா ராம்தேவ் அந்த நட்பின் மூலம் பாஜகவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். பாஜக அரசு பதஞ்சலி நிறுவனத்துக்குக் குறைந்த விலையில் நிலம் அளிப்பது உள்ளிட்ட பல சலுகைகளை அளித்தது.

அரசின் செல்வாக்கைத் தனது பதஞ்சலி நிறுவன விற்பனை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட பாபா ராம்தேவ் நாடெங்கும் விற்பனையை அதிகப்படுத்தினார். பதஞ்சலியின் ஆயுர்வேதப் பொருட்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. இந்த பொருட்கள்  அனைத்தும் செயற்கைப் பொருட்கள் சேர்க்காமல் உருவாக்கப்பட்டது என்னும் விளம்பரம் விற்பனையை பன்மடங்கு அதிகரித்தது. பதஞ்சலி நிறுவனம் பல துறைகளிலும் கால் பதித்து மேலும் விற்பனையை அதிகரித்தது.

அதே நேரத்தில் பதஞ்சலி பொருட்கள் குறித்த புகார்கள் அதிக அளவில் வரத் தொடங்கின. இதனால் ராணுவத்தில் விற்கப்பட்டு வந்த பதஞ்சலி பொருட்களில் பல ரத்து  செய்யப்பட்டன. இதன் தாக்கம் வெளிச் சந்தியிலும் எதிரொலித்தது. அத்துடன் பல நிறுவனங்கள் இயற்கைப் பொருட்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன. பதஞ்சலியின் முக்கியமான விளம்பரமான செயற்கைப் பொருள் சேர்க்கப்படாதது என்பது வேறு பல பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் தனது லிவர் ஆயுஷ் பொருட்களை அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பியது. அத்துடன் இந்துலேகா, உள்ளிட்ட பல பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்கள் உள்ளிட்டவைகளை சந்தையில் அறிமுகம் செய்தன. கோல்கேட் நிறுவனம் தனது இயற்கை  தயாரிப்பான வேத்சக்தி பற்பசையை அறிமுகம் செய்தது. இவை அனைத்தும் பதஞ்சலி விற்பனையைப் பாதித்துள்ளது.

நாடெங்கும் பதஞ்சலி பொருட்கள் விற்பனை சென்ற வருடம் 2.7% சரிந்துள்ளன. இதில் நகர்ப்புற விற்பனை 15.7% சரிவைச் சந்தித்துள்ளது. அதே  நேரத்தில் கிராமப்புற பகுதிகளில் பதஞ்சலி விற்பனை அதிகரித்துள்ளது. கிராமப்புற விற்பனை அதிகரிப்பால் பதஞ்சலி தற்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. கிராமப்புற விற்பனை குறைவு என்பதால் மொத்தத்தில் பதஞ்சலி பொருட்கள் விற்பனை சரிந்துள்ளது என்றே கூற வேண்டும்.

More articles

Latest article