டில்லி:
கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் போன்றவை வெளிநாட்டு விளையாட்டுக்கள் என்பதால் இதில் விளம்பரம் செய்ய யோகா சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மறுத்து வருகிறது.
இது குறித்து அந்நிறுவன தலைமை நிர்வாக ஆச்சார்யா பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்திய விளையாட்டுக்களான கபடி, மல்யுத்தம் போன்றவற்றை அடிமட்டத்தில் இருந்து ஊக்குவிக்க பதஞ்சலி நிறுவனம் முதலீடு செய்யும்’’ என்றார்.
ஐபிஎல் என்பது உலகளவில் பணக்கார விளையாட்டு போட்டியாக உள்ளது. ஆண்டுக்கு ரூ.570 முதல் ரூ,600 கோடி வரை விளம்பரத்திற்கு செலவு செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக பதஞ்சலி உள்ளது. ஆயுர்வேத சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் போட்டிக்கு இடையே மீடியா, சமூக வலை தளங்கள், டிஜிட்டல் முறையிலான விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு மல்யுத்த லீக் போட்டியை ஸ்பான்சர் செய்தது. 2 ஆண்டுகளாக உலக கபடி போட்டியை முன்னின்று நடத்தி வருகிறது. இது போன்ற உள்ளூர் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெடிசன் வேர்ல்டு நிறுவன தலைவர் சாம் பல்சாரா கூறுகையில், ‘‘கிரிக்கெட்டை வெளிநாட்டு விளையாட்டு என்று அழைக்கலாம் ஆனால். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வெளிநாட்டு அமைப்பு என்று யாரும் அழைக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்