சிட்னி:
க்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2-ம் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பேட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியின் போது மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணிகளை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் வேறுவழியின்றி இந்த போட்டி கடந்த 4-ந் தேதி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி உள்பட 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2-ம் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பேட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அதில், “சொந்த காரணங்களுக்காக மேற்கிந்தியத் தீவுகள் பயணத்திலிருந்து டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் தான் மீண்டும் பங்கேற்கப்போவதில்லை என கம்மின்ஸ் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.