பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு..
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.
முதல்- அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் இருக்கிறார். இந்த கூட்டணியில் பா.ஜ.க,.லோக்ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
லோக்ஜன சக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வான் பீகார் மாநிலத்தில் கட்சி விவகாரங்களை கவனித்து வருகிறார்.
சிராக் பஸ்வான், இப்போது மக்களவை உறுப்பினராக இருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க.கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் பகிரங்கமாகவே ஈடுபட்டுள்ளார் , சிராக்.
’’நடைபெற இருக்கும் பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக. கூட்டணிக்கு , யார் தலைவர் என்பதை பா.ஜ.க.தான் முடிவு செய்யும்’’ என்று திருவாய் மலர்ந்துள்ளார், சிராக்..
அதாவது, தங்கள் கூட்டணி வென்றால்,பீகார் முதல்வர் யார் என்பதை பா.ஜ.க. தான் தீர்மானிக்கும் என்பது சிராக் பஸ்வான் கருத்து.
இதனால் நிதீஷ்குமார் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே பீகாரில் பா.ஜ.க.கூட்டணியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
‘’ நீதீஷ்குமார் கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை. எனவே நிதீஷ்குமார்,தனது முதல்வர் பதவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என உள்ளூர் பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்னொரு கூட்டணி கட்சியான,ராம்விலாஸ் பஸ்வான் கட்சியும் நிதீஷ் குமாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பது, பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.