ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம் முறையாக கட்டப்பட்டதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்ற நிலையில்,  ஏப்ரல் 6ந்தேதி பிரதமர் மோடியால் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த பாலம் திறந்து, 3 மாதங்களே கடந்த நிலையில், அவ்வப்போது தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது.  இந்த செங்குத்து தூக்குப்பாலம் திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே  சம நிலையில் கீழே இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.  தொடர்ந்து அவ்வப்போத,  தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாலத்தை கடக்க முடியாமல், நடுவழியில் அடுத்தடுத்து நின்ற ரயில்களால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக பாலத்தில் சீராக ரயில் சேவை நடந்து வந்த நிலையில், அவ்வப்போது தூக்குப்பாலத்தை உயர்த்தி இறக்கும் போது சிறு சிறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் கடந்த நான்கு நாட்களாக பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நேற்று மாலை புதிய செங்குத்து தூக்குப்பாலத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பாலம் சமநிலையில் இல்லையென ஆபரேட்டர் அறையில் உள்ள சென்சார் கண்காணிப்பு மானிட்டரில் எச்சரிக்கை வந்துள்ளது.

உடனே ரயில்வே ஊழியர்கள் பாலத்தை உயர்த்தி இறக்கி சரி செய்வதற்காக சிவப்பு விளக்கு எச்சரிக்கை செய்தனர். நீண்ட நேரமாக முயற்சியில் ஈடுபட்டும் சரியாகவில்லை. எனவே, பாலத்தின் உள்ளே ரயிலை அனுமதிக்காமல் பிற்பகல் 4 மணிக்கு மேல் புறப்பட்ட அனைத்து ரயில்களும் அக்காள்மடம், ராமேஸ்வரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டன.

இரவு 7 மணி அளவில் செங்குத்து தூக்குப்பாலத்தில் இன்ஜினை மட்டும் ஆமை வேகத்தில் இயக்கி சோதனை செய்தனர். இரவு 8 மணி வரை பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட தாம்பரம் எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர் ரயில் அக்காள்மடம் பகுதியிலும், சென்னை போட் மெயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

எந்தவித முன்னறிவிப்பு இன்றி ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இரவு 8:05 மணியளவில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தூக்குப்பாலத்தில் ஆமை வேகத்தில் கடந்து சென்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக, பாலத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.