நாகை : நாகப்பட்டினம் இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது. இந்த சேவை வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை இலங்கை இடையேயான பயணிகள்  தனியார் கப்பல் சேவை அவ்வப்போது தொடங்குவதும், பின்னர் பயணிகளின் இல்லாமல் நிறுத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது கடந்த முறை நிறுத்தப்பட்டதற்காக வானிலை மாற்றம் காரணம் என கூறி வந்த நிலையில், இன்றுமுதல் மீண்டும்,  நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை  தொடங்கி உள்ளது.

 இலங்கை செல்ல காலை உணவு, மதிய உணவுடன் சேர்த்து ஒரு நபருக்கு கட்டணமாக ரூ. 4,250 வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இச்சேவை இருக்கும் என  கப்பலை இயக்கும்  சுபம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்கியது. சிவகங்கை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை இந்த்ஸ்ரீ ஃபெர்ரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தினசரி இயக்குவதாக அறிவித்து பயணித்தது. ஆனால், இதற்கு மக்களிடைய வரவேற்பு இல்லாததால், அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து,  2023ம்ஆண்டு  அக். 10-ம் தேதி முதல் மீண்டும்  பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.  செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்  கப்பலில் பயணிக்க பயணிகளுக்கான கட்டணம் 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இதை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி   கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது. ஆனால், போதிய பயணிகள் இல்லாததால் தினசரிக்கு பதிலாக வாரம் மூன்று நாட்கள் மட்டும் இயக்க கப்பல் போக்குவரத்து நிறுவனம் தீர்மானித்து இயக்கியது. ஆனால், அதிலும் போதிய அளவு பயணிகள் இல்லாததால்,. கப்பல் சேவை ஒத்தி வைக்கப்படுவதாக  2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், தற்போது 4வதுமுறையாக மீண்டும்,  நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு  பயணிகள் கப்பல் சேவை  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  பிப்ரவரி 12ம் தேதி) மீண்டும் சேவை தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வானிலை பிரச்சினை காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 22ந்தேதி)  கப்பல் சேவை தொடங்கி உள்ளது.