சென்னை: கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒடியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இயக்கப்படும் பல்வேறு தனியார் வாகனங்களில் ‘காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்’ என, ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் கட்சி உறுப்பினர் என்பதை பறை சாற்றும் வகையில் கட்சி சின்னங்கள், கொடிகளையும் சிலர் பொருத்தி உள்ளனர். இது விதிகளை மீறிய செயல். ஆனால், பலர் தங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி மக்களையும், அதிகாரிகளையும் மிரட்டி வருகின்றனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபடும் ரவுடிகள், போதை பொருள் விற்பனையாளர்கள் உள்பட பலரும் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது சர்ச்சையாகி வருகிறது.
இதுதொடர்பாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்தது. அத்துடன் “கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஆனாலும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்கள் தமிழக சாலைகளில் இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கார்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு செல்வதையும் காண முடிகிறது. இதன்மீது தமிழக காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என கேள்வி எழுப்பியதுடன், சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று தனி வழி இருந்தும், அந்த பாதை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. நகரங்களில் உள்ள சாலைகளில் பைக்குகளுக்கு என்று தனி வழி இல்லை. முன்பு போல பைக்குகள் செல்வதற்கு என்றே தனி வழி ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
பின்னர் இந்த வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்த வழக்கன் விசாரணையின்போது, சாலை விபத்துகளை தடுக்க, பள்ளி, கல்லுாரி அளவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதி மன்றம் வலியுறுத்தியத.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ‘கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்ததுடன், கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு கூறியதுபோல, வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்க ஓரிரு நாள் மட்டுமே நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இன்னும் பலர் வாகனங்களில் பிரஸ், ஊடகம், வழக்கறிஞர் என போலியான ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்துள்ளனர். அதுபோல போதை கடத்தல் கும்பல்களும் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டி வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி கட்சியினர் தங்களது கார்களில் கொடிகளை மாட்டி செல்லும் நிகழ்வுகளும் தற்போதுவரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதன்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பது இல்லை என்பதே உண்மை நிலவரம்.