ஈரோடு
சினிமாக்காரர்கள் என்பதால் ரஜினியையும் கமலையும் ஒதுக்கிவிடாதீர்கள் என நடிகர் பார்த்திபன் சத்யராஜின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நடிகர் சத்யராஜ் பேசினார் அப்போது அவர் ”நடிகர்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்து வருகிறது. நடிகர்கள் என்பதாலேயே அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது” என ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அரசியல் பிரவேசம் பற்றி பேசினார்.
இந்நிலையில் ஈரோடுக்கு ஒரு திருமண நிகழ்வுக்கு வந்திருந்த நடிகர் பார்த்திபன் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “கமலஹாசனும் ரஜினிகாந்தி சந்தித்து பேசி இருப்பது அவர்களுடைய ஆரோக்ய அரசியலை காட்டுகிறது. அவர்கள் சினிமாக்காரர்கள் என்பதால் அவர்களை யாரும் ஒதுக்காதீர்கள். மக்கள் அவர்கள் நடிப்புக்காக கொடுத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய அவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை நிச்சயமாக அவர்களை நம்பலாம். அதே நேரத்தில் அவர்களில் ஒருவரைக் குறிப்பிட்டு அவருக்கு வாக்களியுன்க்கள் எனவோ என்னுடைய ஆதரவு இருவரில் யாருக்கு எனவோ இப்போது நான் சொல்ல மாட்டேன். தேர்தல் நேரத்தில் நிச்சயம் அதை சொல்லுவேன்” என கூறினார்.
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனால் 10% வாக்கு கூட பெற முடியாது என பார்த்திபன் கூறியது குறிப்பிடத்தக்கது.