சென்னை,
மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண 5 நாள் பரோலில் சசிகலா சென்னை வந்தார். அவரது பரோல் காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று இரவு அவர் மீண்டும் சிறைக்கு திரும்புவார் என தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், அவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, சசிகலா கணவரை காண விரும்புவதாக பெங்களூரு சிறைத்துறைக்கு15 நாள் பரோல் கேட்டு மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு 5 நாள் மட்டுமே பரோல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கணவர் நடராஜனை கவனித்துக் கொள்வதற்காக சசிகலா கடந்த 6-ம் தேதி பிற்பகல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.
அவரது பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து சசிகலா இன்று பிற்பகல் பெங்களூர் சிறைக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், அவரது உறவினர்கள் வேண்டுகோளை ஏற்று மேலும் சில நாட்கள் பரோல் கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால், 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா அதிகபட்சமாக தனது கணவருடன் 5 மணி நேரம்கூட செலவிடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், சிறைச்சாலை விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறி அரசியல் கட்சியினரை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் காரணமாக அவரது பரோல் நீடிக்க வாய்ப்பில்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.