சென்னை,
ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் பரோல் மேலும் தமிழக அரசு நீட்டிக்காத நிலையில் அவர் மீண்டும் சிறைக்கு புறப்பட்டார்.
கடந்த இரண்டு மாதமாக பரோலில் இருந்த பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பரோலை நீட்டிக்க அரசு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜோலார்பேட்டையில் இல்லத்தில் இருந்து வேலூர் சிறைக்கு புறப்பட்டார்.
பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். எனவே, தந்தையை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இதனையேற்று, கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி ஒரு மாத பரோலில், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் அவரது தாயார் வேண்டுகோளை ஏற்று பரோல் மேலும் ஒரு மாதகாலம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அவரது அம்மா அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தார்.
ஆனால், பேரறிவாளர் பரோலுக்கு காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க அரசும் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதன் காரணமாக அவரது பரோல் இன்றுடன் (24-ந்தேதி) முடிவடைவதால் இன்று மாலை 5 மணிக்குள் அவர் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவானது.
அதன் காரணமாக இன்று பிற்பகல் 3 மணி அளவில் தனது ஜோலோர்பேட்டை இல்லத்தில் இருந்து சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறையில் அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிறையினுள் அடைக்கப்படுவார் என்று சிறைதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.