டெல்லி: இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு வரும் 28ஆம் தேதி விசார நடத்தும் என அறிவித்து உள்ளது.

நாட்டின் முன்னணித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், எதிர்க்கட்சித்தலைவர்கள், மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் எனப்படும் மென்பொருளைக் கொண்டு மோடி தலைமையிலான மத்தியஅரசு இந்தமுறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதுடன், இது தொடர்பாக விவாதிக்க வலியுறத்தி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரு அவைகளும் முடக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளது. முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு,  தகவல் தொழில்நுட்பத் துறை, உள்துறை அமைச்சகங்களின் அலுவலர்களுக்கு  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், பெகாசஸ் விவகாரத்துக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பு இல்லை, இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித முகாந்திரமும் இல்லை எனத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுத்துள்ளார்.