டெல்லி: கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கூட்டுக்குழுவில், காங்கிரஸ் கட்சி, திமுக, டிஎம்சி கட்சிகளின் உறுப்பினர்கள் சேரவில்லை. ஆனால், அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா, 2025; ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2025; மற்றும் யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா, 2025 – ஆகிய சட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
அதுபோல, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டாலோ, அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டடது. அரசாங்கங்கள் சிறையில் இருந்து நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த மசோதாக்களின் நோக்கமாகும்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடளுமன்ற கூட்டு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி குழு உறுப்பினர்களுக்கான தேடல் பணி நடைபெற்று வந்தது. இதில், சேர காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச்சேர்ந்தவர்கள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

எதிர்க்கட்சிகளை அணுக பல முயற்சிகளுக்குப் பிறகு, காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாமல் குழு இறுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக தலைவர்கள் இல்லை
இந்த கூட்டுக்குழுவின் தலைவராக, புவனேஸ்வரைச் சேர்ந்த பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் குழுவை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட 31 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டம் விரைவில் கூடி மசோதா குறித்து ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.