சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை பொறுத்தே தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில், தமிழ்நாடு உள்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல், வாக்குச்சாவடி, பாதுகாப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்தகொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் நிலவி வரும் தேர்வு பணிகளுக்கான அட்டவணை, உள்ளூர் விடுமுறை, பண்டிகைக்காலம், தொகுதி வாரியாக இருக்க கூடிய முக்கிய நிகழ்வுகள், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சாவடி மையங்கள், வாக்கு பதிவு இயந்திரம், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிக்கையை இன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் இதனை அடிப்படையாக கொண்டும், 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணையை அடிப்படையாக கொண்டு தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும்.
பலகட்டமாக இந்தியா முழுவதும் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்கத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.