சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேமுதிக 40 தொகுதிகளுக்கும் தனது கட்சியினரிடையே விருப்ப மனு கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில்  ரூ.20 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப மனு பெற்று மனு தாக்கல் செய்யலாம் என்று தேமுதிக தலைமை அறிவித்து உள்ளது.

விருப்ப மனு விநியோகம்  பிப்ரவரி 24ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 6ந்தேதி வரை என 10 நாட்கள் நடைபெறும் என்றும், அதற்குள் தேர்தலில் போட்டியிட விரும்பு பவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று  தேமுதிக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு அமைப்பதில் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வருகின்றன. திமுக தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. இந்த இரு அணிகளும் விஜயகாந்தின் தேமுதிகவை தங்களது பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக அணிக்கு தேமுதிகவை இழுக்க பாஜக அமைச்சர் பியூஸ் கோயல்  பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தேமுதிகவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்று ஒதுங்கிக்கொண்டார். அதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் தொடர்புகொண்டதாக தகவல்கள் வெளியானது.  இதற்கிடையில் திமுக தரப்பிலும் தேமுதிகவை தொடர்புகொண்டதாகவும், தேமுதிகவின் நிபந்தனைகள் மற்றும் அவர்கள் கேட்கும் அதிகப்படியான தொகுதிகளை கொடுக்க முடியாத நிலையில் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதன் காரணமாக தேமுதிக தலைமையில் டிடிவி தினகரனின் அமமுக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்த பரபரப்பான சூழலில், தேமுதிக, 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்யும்படி தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதன் காரணமாக தேமுதிக தனித்து போட்டியிட விரும்புகிறதோ என்ற சந்தேகம் எழும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையிலேயே, தேமுதிகவுக்கு இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தும் நோக்கத்திலேயே  இதுபோன்ற அறிவிப்பை தேமுதிக வெளியிட்டு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.