டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.  முதல்நாள் கூட்டத்தொடரிலேயே இன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று  (நவம்பர் 29ந்தேதி) தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொடர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி வேளாண் சட்ட வாபஸ் குறித்து அறிவித்து உள்ளதால்,  இன்றைய முதல்நாள் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன் மாநிலங்களவையும் எடுத்துக்கொண்டு நிறைவேற்றும்.

இது தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தொடரில் பங்கேற்க கொறடாமூலம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்கள் தவறாது இன்று அவைக்கு வர வேண்டும் என கொறடா மூலம் உத்தரவிட்டு உள்ளது.

தொடர்ந்து,கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதா, திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதா உள்பட 26 மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது. அதே வேளையில் எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டம், பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப தயாராக உள்ளது.