டில்லி:
பாராளுமன்ற இரு அவைகளும் தொடர் அமளியால் இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் “நோட்டு செல்லாது” விவகாரத்தை கையிலெடுத்துள்ள எதிர்கட்சியினர், இந்த விவகாரத்துக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். . அதற்கு பிரதமர் மோடி மறுப்பதால், அவையில் தொடர்ந்து அமளி நடந்துவருகிறது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் அவை இன்று மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்றும், “ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் அவைக்கு வரவேண்டும்” என முழக்கமிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியினர் எழுந்து நின்று குரல் கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
மேலும், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர் என கூறியதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.