டில்லி

டந்த நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக்குழு ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து எச்சரித்துள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தற்போதைய இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இங்கு தினசரி பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டி உள்ளது.   மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது.   பல மாநிலங்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காததால் பல கொரோனா நோயாளிகள் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதமே ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசை எச்சரித்துள்ளது.  ஆனால் இந்த எச்சரிக்கையை மத்திய பாஜக அரசு கருத்தில் கொள்ளாமல் இருந்துள்ளது.   இது குறித்து நவம்பர் 21 ஆம் நாடாளுமன்ற நிலைக்குழு ஒரு அறிக்கையை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதே அறிக்கை அதன்பிறகு இந்த வருடம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அப்போதும் மத்திய பாஜக அரசு மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், “நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த நவம்பர் மாதமே ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆனால் அதற்கு பிறகும் மோடி அரசு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இப்போது நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது மிகப் பெரிய மனிதத் தவறு” எனப் பதிந்துள்ளார்.