டெல்லி: கொரோனா வைரஸ்  அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்றம்  இன்று காலை 9 மணிக்கு கூடியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுமுதல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாள் ஒன்றுக்கு  மக்களவை நான்கு மணி நேரமும் மாநிலங்களவை நான்கு மணி நேரமும் மட்டுமே நடைபெறும் என்றும் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை மாநிலங்களவைவும் பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மக்களவைவும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை  காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கியது.  சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில், பிரதமர் மோடி உள்பட மத்தியஅமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவையில் சமுக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர். இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் அவரும், ராகுல்காந்தியும் கலந்துகொள்ளவில்லை.  பெரும்பாலான எம்.பி.க்கள் இன்றைய கூட்டத் திற்கு வந்திருந்தனர்.

இன்றைய முதல்நாள் கூட்டத்தில்,  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ், முன்னாள் சத்தீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகி, எம்.பி. கவர்னர் லால்ஜி டாண்டன், உ.பி. அமைச்சர்கள் கமல் ராணி மற்றும் சேதன் சவுகான் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராகுவன்ஷ் பிரசாத் சிங் மற்றும் பிறருக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில், மத்தியஅரசு  47 மசோதாக்கள் மீது விவாதம் நடத்த மத்திய அரசு தயாராகி உள்ளது.

அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் இந்திய சீன எல்லைப் பிரச்சனை, பொருளாதார பிரச்சனை ஆகியவற்றை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

மேலும் நீட் குறித்த பிரச்சினையை எழுப்ப திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது