டில்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டின் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்கியது.பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதிமந்திரி அருண்ஜேட்லி தாக்கல் செய்தார். இந்த நிதி பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் இணைந்து தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு பிப்ரவரி 9ந்தேதி கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. ஜிஎஸ்டி-யை வரும் ஜூன் மாதம் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதற்கு தேவையான சட்டத்திருத்தங்கள் இந்தத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளிவர உள்ள நிலையில், முடிவையடுத்து பாராளுமன்ற கூட்டம் களை கட்டும் என தெரிகிறது.
இந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மட்டுமல்லாது, மகப்பேறு சட்டத் திருத்த மசோதா, கடல்சார் விவகாரங்கள் சட்ட நடைமுறை மசோதோ, மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா போன்ற பல மசோதாக்கள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்தியஅரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த ஒத்திவைப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் பாராளுமன்றம் மேலும் கலைகட்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இந்த கூட்டத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.