download
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவம் படிப்பதற்கு இடம் வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அப்பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயச்சந்திரன், சகுந்தலா, பாஸ்கர் சேதுபதி பாண்டியன், அகிலா, பஞ்சினி மகேஷ் ஆகியோர் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று  மோசடி புகார் அளித்தனர்.
இவர்களில் இருவர் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் மதன் மீதும், மற்ற 3 பேர் மதன் மற்றும் பாரிவேந்தர் ஆகிய இருவர் மீதும் புகார் தெரிவித்துள்ளனர்.
அதில், “முதுகலை மருத்துவப் படிப்பிற்கு இடம் வழங்குவதாகக் கூறி ஒவ்வொருவரிடம் இருந்தும் சுமார் 1 கோடி ரூபாய் அளவில் பணம் பெற்றுக்கொண்டார்கள்.
மருத்துவப் படிப்பிற்கான இடம் கேட்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, மதனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, அவரிடம் பேசி முடித்துக் கொள்ளுமாறு சொல்லப்பட்டது.
கடந்த 12 ஆண்டுகளாகவே, இதே முறையில் பலரும் சீட்டுக்களை பெற்றதாக தெரிய வந்ததன் காரணமாகவே, நாங்களும் பணம் செலுத்தினோம்.
தற்போது மதன் தலைமறைவாகிவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்திற்கு பதில் அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.
பண மோசடியில் ஈடுபட்ட பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மீதும், மதன் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” – இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.