232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும்: திருமாவளவன்

Must read

  download (2)

சிதம்பரம்:
அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல.. மீதமுள்ள 232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று  பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“தமிழக சட்டசபை தேர்தலின் போது பல்லாயிர கோடி அளவில்  பணப்பட்டுவாடா நடைபெற்றதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
குறிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் 100 சதவீதம் பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது.  ஆகவே தமிழகத்தில் 232 தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல்,  சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.  குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
கோவையில் தலித் மாணவி ஒருவர் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆளும் தரப்பினர்  எந்த ஆறுதலும் கூறவில்லை. இது தலித் மக்களுக்கு எதிரான அலட்சியப்போக்கை காட்டுகிறது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். நான் பாராட்டு தெரிவித்தேன். ஆனால் அந்த திட்டங்கள் பொதுமக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.
டாஸ்மாக் நேரம் பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது  குடிகாரர்கள் மாலையில் அதிகமாக குடிப்பது வழக்கம். ஆகவே காலையில் 2 மணி நேரம் குறைத்ததை மாலையில் 6 மணியில் இருந்து 10 மணியாக குறைத்திருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
காட்டுமன்னார் கோவிலில் நான் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கேட்டேன். மேலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்.
தாமதமாக மக்கள் நலக்கூட்டணி அமைந்ததால் பொதுமக்களிடம் எங்கள் வாக்குறுதிகள்  சென்று சேரவில்லை. தொடர்ந்து மக்கள் நல கூட்டணி நீடிக்கும்.” –  இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
 

More articles

Latest article