டில்லி:

சிபிஎஸ்இ 10வது கணிதம், 12வது பொருளியல் மறு தேர்வு அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

டில்லியில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், மற்ற மாநில மாணவர்களுக்கு மறு தேர்வு ஏன் என்று கேள்வி விடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் டில்லியில் வெளியானதாக புகார் வந்த நிலையில், இது தொடர்பாக 32 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக  இந்நிலையில் ஏப்ரல் 24, 26ந்தேதிகளில் 12 மற்றும் 10 வகுப்பு பாடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம்  நேற்று அறிவித்தது.

இந்நிலையில் மறுதேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜந்தர்மந்தரில் மாணவர்கள்  திரண்டு போராட்டம் நடத்தினார்கள். டில்லி  சிபிஎஸ்இ அலுவலகம் முன்பும்  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பையில் சிபிஎஸ்இ அலுவலகம் எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.  டில்லியில் கேள்வித் தாள் வெளியானதற்கு, மும்பையில் ஏன் மறு தேர்வு என்று ஆவேசமாக கூறி உள்ளனர்.

இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள ஒரு மாணவரின் பெற்றோர், தேர்வு எழுதிவிட்டு வந்த எனது மகன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். ஆனால்,  தற்போது மறுதேர்வு அறிவித்திருப்பதால் அவன் மனச்சோர்வு அடைந்துள்ளான். அவனது சோர்வை பார்த்த எங்களால் தாங்க முடியவில்லை. இதுபோலவே பல்வேறு மாணவர்கள் மன ரீதியிலான பாதிப்பு ஆளாகி உள்ளதாக பெற்றோர்கள் கூறி உள்ளனர்.

சிபிஎஸ்இ-ன் இந்த மறு தேர்வு அறிவிப்பு காரணமாக நாடு முழுவதும் நேர்மையாக தேர்வு எழுதிய லட்சகணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு மாணவனின் பெற்றோர் கூறி உள்ளார்.

இந்நிலையில், தேர்வு முடிந்ததை தொடர்ந்து, எதிர்காலத்திற்கான மேற்படிப்புக்காக மாணவர்கள் ஆயத்தமாகி வரும் சூழலில், சிபிஎஸ்இ  மறுதேர்வு அறிவித்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக  மற்றொரு மாணவியின் பெறோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேர்வு முடிந்ததையொட்டி, பல்வேறு வெளி இடங்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மறு தேர்வு அறிவித்திருப்பது, பெருத்த ஏமாற்றத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக பெரும்பாலான பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், டில்லியில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது.  ‘சிபிஎஸ்இ செய்த தவறினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனைத்து தவறுக்கும் சிபிஎஸ்இ தான் காரணம். அவர்கள் கேள்வித்தாளை பாதுகாக்க தவறி விட்டனர். சிபிஎஸ்இ செய்த தவறினால் மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.