மாணவர்களின் “லாக் ரூம்” வக்கிரங்கள்… உஷாராக இருக்க வேண்டிய பெற்றோர்கள்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் ஒரு பிரபல பள்ளி மாணவர்கள் “லாக் ரூம்” என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பக்கத்தில் இவர்கள் தங்களுடன் பயிலும் சக மாணவிகளின் புகைப்படங்கள், அவர்களின் அந்தரங்க விசயங்கள் போன்றவற்றைப் பகிர்ந்து வந்ததுடன், அம்மாணவிகளைச் சம்பந்தப்படுத்தி மிகவும் கீழ்த்தரமான, பாலியல் ரீதியிலான கமெண்ட்களையும், குறிப்பாகக் கூட்டு பலாத்காரம் குறித்து மிகவும் வெளிப்படையாகவே கமெண்ட் செய்து தங்களின் வக்கிரத்தை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர் இச்சிறுவர்கள்.
அதுவும் அந்த குரூப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட் மூலமாகவே தான் இந்த விசயமே வெளி உலகிற்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சில அமைப்புகளின் முயற்சியாலும், நீதிமன்ற தலையீட்டாலும் இந்த மாணவர்களின் மேல் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் மும்பையைச் சேர்ந்த ஒரு பள்ளி 13 – 14 வயது மாணவர்கள் எட்டு பேரை இதே போல சக மாணவிகளைப் பற்றிய கீழ்த்தரமான பதிவுகள் மற்றும் பாலியல் ரீதியிலான கமெண்ட்கள் செய்ததற்காக சஸ்பெண்ட் செய்தது. மேலும் சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் முகநூல் குழு தங்கள் சக மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்களை மற்றும் அவர்கள் குறித்த பெர்சனல் விசயங்களை எல்லாம் பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இவர்கள் அனைவரும் Reddit என்னும் சமூகத் தளத்திற்கு மாறி விட்டிருக்கின்றனர். ஒரு மாணவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்கீன் ஷாட்டில் சக மாணவன், “என் ஆளு அவளோட நியூட் போட்டோ எதையும் தர மாட்டேனுட்டா. ஆனா அவளோட பழைய பாய் பிரண்ட் கொடுத்தான். பி்.கு.: அது எல்லாமே இருக்கு என்கிட்ட” என்று வெளிப்படையாகவே கமெண்ட் செய்துள்ளான்.
இதெல்லாமே இம்மாணவர்களின் வக்கிர எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது மிகப்பெரிய கொடுமை. சமூக வலைத்தளங்களில் இவர்களைப் போன்றவர்களால் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பெண்களின் வலைத்தள பக்கங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டதாகவே இருக்கிறது. அல்லது அப்பெண்களின் முன்னாள் இன்னாள் காதலர்கள் மற்றும் ஆண் நண்பர்களால் பகிரப்பட்டவையாகவே இருக்கின்றன. மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் புகைப்படங்களும் மிக அதிகம்.
இவைகளுக்கென இம்மாணவர்கள் பல சங்கேத குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
“கடந்த 2018-லிருந்து இது போன்ற குரூப் சாட்களும், அதில் அப்பெண்களுக்குத் தெரியாமலேயே எடுத்து உபயோகிக்கப்படும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் புகைப்படங்களும் அதிகமாகி வருகிறது” என்கிறார் வழக்கறிஞரும், சைபர் கிரைம் விக்டிம் கவுன்சிலருமான டாக்டர் டெப்ராட்டி ஹால்டர்.
இவை நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது தான் இவைகளை தடுக்கும் ஒரே வழி. மேலும் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த பொறுப்பு இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை.
– லெட்சுமி பிரியா