ஆந்திரா:

தங்களுடைய சொந்த மகள்களை நரபலி கொடுத்துவிட்டு உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த பேராசிரிய தம்பதியினரால் ஆந்திர மாநிலமே அதிர்ச்சியில் உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் புருஷோத்தம் நாயுடு, பத்மஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர், புருஷோத்தம் நாயுடு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார், அவரது மனைவி பத்மஜா பேராசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு அலேக்யா (வயது 27), சாய் திவ்யா (வயது 22) ஆகிய இரு மகள்களும் கொரோனா காரணமாக கடந்த 9 மாதங்களாக பெற்றோருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் புருஷோத்தம் நாயுடு மற்றும் அவரது மனைவியும் அற்புதம் நிகழ்த்துவதாக தெரிவித்து தொடர்ந்து பல பூஜைகளை செய்து வந்துள்ளனர்.

இதைதொடர்ந்து நேற்று இரவு பூஜைகள் செய்த தம்பதிகள் தங்களுடைய இரு மகள்களையும் நிர்வாணப்படுத்தி கொலை செய்துள்ளனர், வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் வந்து பார்த்தபோது இரு மகள்களும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தனர். காவல்துறையினர் இரு மகள்களையும் மீட்டெடுத்து சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைப்பற்றி பெற்றோர்களிடம் விசாரித்தபோது, ஒரு இரவு பொருத்திருங்கள் எங்கள் மகள்கள் உயிர்த்தெழுந்து வந்துவிடுவார்கள் என்று திரும்பத் திரும்ப தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் இந்த துயர சம்பவம் நடந்திருப்பதாகவும், பெற்றோர்களிடம் விசாரித்தால் மீண்டும் மீண்டும் ஒரு இரவு பொறுத்திருந்தால் எங்கள் மகள்கள் மீண்டும் உயிர்தெழுவார்கள் என்று தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் சித்தூர் டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி தெரிவித்துள்ளார்.