மாத்திரைக்காகத் தவித்த பிஞ்சு உயிர்… கண்கலங்கவைக்கும் உதவிகள்
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையைச் சேர்ந்த டெபாஷிஸ் நாயக்கின் இரண்டு வயது குழந்தை வலிப்பு (Epileptic Encephalopathy) நோயினால் பாதிக்கப்பட்டுத் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறது.  இக்குழந்தை தொடர்ந்து Sabril (Vigabatrin) என்னும் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆனால் இந்த எதிர்பாராத ஊரடங்கினால் உள்ளூர் மருந்துக்கடைகள் எதிலும் இந்த மாத்திரை ஸ்டாக் இல்லாத காரணத்தினாலும், கையிலிருந்த மாத்திரைகள் தீர்ந்துவிட்டதாலும் கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு குழந்தைக்கு மாத்திரை கொடுக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள் நாயக் குடும்பத்தினர். இந்த மாத்திரை வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுபவை என்பதால் இங்கு எங்கேயும் வாங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுவிட்டது.
இது குறித்து நாயக்கின் நண்பரும்,  ஐபிஎஸ் ஆபீசருமான பீகாரைச் சேர்ந்த அருண் போதரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.  இதனைப் பார்த்த பெங்களூருவைச் சேர்ந்த ராமன் சங்கர் என்பவர் தனது 7 வயதுக் குழந்தைக்கென வாங்கி வைத்திருந்தவற்றில் 20 மாத்திரைகளைத் தருவதற்கு முன் வந்தார்.
இதனை அறிந்தவுடன் பெங்களூரு நார்த்-ஈஸ்ட் டிவிசன் டெபுடி கமிஷனர் பீமசங்கர் குலெத் உடனடியாக செயல்பட்டு இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அந்த மாத்திரைகளை வாங்கி வர அனுப்பினார்.
இதே நேரத்தில் பெங்களூரு புரூக்ஃபீல்டை சேர்ந்த மற்றொரு பெற்றோரும் இதே மாத்திரைகள் தேவையில் இருப்பதைச் சொல்ல, பீமா சங்கர், மீண்டும் ராமன் சங்கரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்க, அவரும் சற்றும் யோசிக்காமல் 40 மாத்திரைகளைக் கொடுத்து உதவியுள்ளார். “என்னால முடிஞ்சது அவ்ளோ தான்.  இந்த மாத்திரைகளை நாங்க யாருக்கு குடுக்குறோம், அவங்க பேர் என்னானு கூட தெரியாது எங்களுக்கு.  இவ்ளோ நல்ல மனசுக்காரங்க இருக்கிறதால இந்த மாத்திரைகளை எங்களால கொடுத்து உதவ முடிஞ்சது.  அதுவே சந்தோசம் தான் எங்களுக்கு” என்கிறார் வெகு சாதாரணமாக.
இரண்டு தன்னார்வலர்களை இரு சக்கர வாகனத்தில் அனுப்பி இந்த மாத்திரைகளை உடனே சென்னைக்குக் கொண்டு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் டெபுடி கமிஷனர்.  அத்துடன், தற்போது சென்னையில் பணியாற்றும் அவருடன் ஐபிஎஸ் பயிற்சியிலிருந்த சசாங்க் சாய் மற்றும் தீபா கானிகர் இருவரையும் தொடர்பு கொண்டு மாத்திரைகளை எடுத்து வரும் தன்னார்வலர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.
திங்கள்கிழமை மதியம் போல சென்னை வந்தடைந்த தன்னார்வலர்கள் மாத்திரைகளை அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  “பெங்களூருவிலிருந்து பைக்ல மாத்திரைகளைக் கொண்டு வரோம்னு போன் வந்தப்போ யாரோ விளையாடுறாங்கனு தான் நினைச்சேன்.  ஆனா நேர்ல நிஜமாவே கொண்டு வந்து கொடுத்தப்போ என்னால நம்பவே முடில.  இந்த 24 மணி நேரத்தில் நடந்த எல்லாமே அதிசயமா இருக்கு.  என்னால விவரிக்கக்கூட முடியல” என்று தழுதழுக்கிறார் டெபாஷிஸ் நாயக்.
மேலும் இதனை அறிந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவரும் இவர்களுக்குத் தேவையான மாத்திரைகளைத் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து நாகர்கோவில் இரயில்வே  அதிகாரிகள் சென்னையிலுள்ள காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மாத்திரைகளை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதையே இவை போன்ற நிகழ்வுகள் சுட்டிக்காட்டி மனிதனாக வாழ்வதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்துகிறது.
– லெட்சுமி பிரியா