சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் சென்னை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையமாக அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையத்தை அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்பட 13 கிராமக்கள் கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு பாமக, நாம் தமிழர் உள்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருந்தாலும், விமான நிலையம் அமைப்பதை கைவிட முடியாது என தமிழ்நாடு அரசு பிடிவாதமாக கூறி வருவதுடன், அதற்கான டெண்டரையும் கோரி உள்ளது.
இந்த நிலையில், பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஏகனாபுரம் கிராமத்திற்கு வந்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து உள்ளனர். புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை கண்காணித்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
ஏற்னவே குறிப்பிட்ட 13 கிராமங்களுக்கும் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேதா பட்கருக்கும் தடை விதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.