டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க டெல்லி சென்ற தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்ரமணியன். பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் மாரியப்பனை விமான நிலையத்திற்கு நேரில் வரவேற்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இரண்டவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கடந்த ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் இந்த போட்டியிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், போட்டிகள் முடிவடைந்த வீரர்கள், ஜப்பானில் இருந்து தாயகம் திரும்பி வருகின்றனர். அதன்படி, இன்று மாரியப்பன் தங்கவேலுவும் ஜப்பானிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த அவரை விமைன நிலையத்தில் , தமிழ்நாடு அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று வரவேற்றார். அவருடன் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் உடனிருந்தார்.