சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ் மச்சேந்திரநாத் தலைமையில் ஐஐடி-மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் ₹20,000 கோடி செலவில் 2030-ம் ஆண்டுக்குள் புதிய சர்வதேச கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை கட்ட மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக 13 கிராமங்களில் உள்ள 2,605 ஏக்கர் சதுப்பு நிலம் உள்ளிட்ட மொத்தம் 4,791.29 ஏக்கர் நிலத்தை அப்பகுதி மக்களிடம் இருந்து கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்காக சென்னைக்கு அருகில் 11 இடங்களை மாநில அரசு தேர்ந்தெடுத்தது. தெற்கில் வேடதாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் வடக்கே பழவேற்காடு, புலிக்காட் ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம், கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் தாம்பரம் விமான தளம் போன்ற பல தடைகள் இருந்தன.

இவற்றை ஆய்வு செய்து நான்கு இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI-ஏஏஐ) தேர்ந்தெடுத்தது, அதில் இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களுக்குக் கொண்டு வந்தது.

இதில் கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடனான சந்திப்பின் போது விமான நிலையம் அமைக்க பரந்தூர் இறுதி செய்யப்பட்டது.

இதற்கான தள அனுமதிக்கான கோப்பு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் உள்ளது என்று கூறிய அந்த அதிகாரி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தள அனுமதி கிடைத்ததும், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் அடுத்த கட்டத்திற்கு அரசு செல்லும். விமான நிலையத்திற்கான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயாரிக்க அரசாங்கம் தனி ஆலோசகரையும் விரைவில் நியமிக்கும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்திற்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் 3.5 மடங்கு இழப்பீடு வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது, தவிர, மாற்று நிலம் மற்றும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தது.

இருந்தபோதும், தமிழக அரசின் இந்த லட்சிய திட்டத்திற்கு எதிராக 270 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய நிலங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் அப்பகுதி விவசாயிகள், அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையை உயர்த்திய பின்னரும் தங்கள் வீடுகளையும் விளை நிலங்களையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் உள்ள நீர்நிலைகளை திறம்பட நிர்வகிப்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“நீர் நிலைகளில் உள்ள சிக்கல்களை அறியவும், அதனால் ஏற்படும் நிலைமையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் வெள்ளத்தைத் தடுப்பது போன்ற முக்கியமான காரணிகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தகவலறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக, ஏர் இந்தியா மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அரசு இயக்குநராக இருந்த மச்சேந்திரநாத் தலைமையில் ஐஐடி-மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பரந்தூரில் இந்தப் போராட்டத்தின் மையமாக உள்ள ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து 275 வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 6வது முறையாக மீண்டம் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.